Monday 17 November 2008

Kanavu ulaga sanchaari

கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சாரிப்பவர்களில் நானும் ஒருவன் . ஆயினும் சராசரி மனிதனைப்போல நான் கனவு காண்பதில்லை. அதற்க்காக, புரட்சி செய்ய வேண்டும், ஒவ்வொரு செயலிலும், அர்த்தம் இருக்க வேண்டும், உலகுக்கு நானே முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்ற பகல் கனவு கான்போருடன் சேர விருப்பம் இல்லை. எனது கனவுகள் எல்லாம் ஒரு சிறு கவிதை போல் இருக்கும். அதில் ஒரே ஒரு வில்லங்கம் தான். எழுதி முடிக்கும் முன்பே, தூக்கம் கலைந்து விடும்.குழந்தையின் சிரிப்பை காண்பதென்றால் ஒரு அலாதி பிரியம். உலகம் முழுவதும் குழந்தைகள் மாத்திரம் இருக்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலேயே கனவு உலகில் சஞ்சரிப்பேன். பார்க்கும் இடம் எல்லாம் பசுமை. கேட்கும் ஒலி எல்லாம் மழலை. சிரிப்பு ஒலிகளுக்கு நடுவில் நான். உலகில் போரும், பிணியும் பட்டினியும் கிடையாது. குழந்தைகளின் கள்ளமற்ற சிந்தனைகள் தாம். அந்த பகல் கனவில் இருக்கும் போதே நானும் சிரிப்பேன். பக்கத்தில் இருப்பவர் அதிர்ந்து ஆறு அடி தள்ளி போவார். பாவம், நிஜமான உலகத்தில் வாழ்பவர் போல இருக்கிறது. பயந்து ஒதுங்குகிறார்.இயல், இசை, நாடகம் என்றால் மறுபடியும் கனவு உலகில் சென்று விடுவேன். கவிதை வறி கூட வேண்டாம். ஓம்கார சுருதி இருந்தாலே போதும். இன்பம் தாண்டவம் ஆடும் அந்த முத்தமிழில் என்னை மறந்து, நிலை மறந்து, மெய் மறந்து, கண்மூடி லயித்து கிடக்கும் தருவாயில், என்னை அறியாமல் வரும் புன்சிரிப்பை கண்டு அருகில் இருப்பவர்கள் வியப்பார்கள். ஐயோ பாவம், முற்றிவிட்டதோ என எண்ணி சிலர் அனுதாபத்துடனும், அய்யய்யோ முற்றிவிட்டது போல இருக்கிறதே என்ற பீதியுடன் சிலரும், ஆஹா, முதிடுதுடா சாமி என்று எள்ளி நகையாடி சிலரும் எழுந்தோடுவார்.இறை மீது இருக்கும் பற்று அதிகரிக்கும் போது, உண்ணும் இரையும் மறந்து கிடக்கும் வேளையில் , மனம் குதூகலத்தில் , எனை அறியாமல், வாய் திறந்து புலம்பி இருக்கிறேன். இரை ஏந்தும் கைகளை கண்டு சில நேரம் வெட்கி தவித்து, ஐயோ, நம்மை போல பெருசாழிகள் இருப்பதால் தானே இவரை போல பிச்சைகாரர்கள் இருக்கின்றனர் என்று வேதனை பட்டதுண்டு. அவ்வப்போது, கண்ணீரும் வடித்ததுண்டு . அவர்கள் மத்தியில், வீம்புக்கு உழைக்காது, ஏமாற்றி பணம் பறிக்கும் பகல் கொள்ளை காரர்களிடமும், பிச்சை போட்டு ஏமாற்றமடைந்து வாய் திறந்து சபித்ததுண்டு. வறுமையை பார்த்து, இறையிடம், பஞ்சமும், பிணியும், பட்டினியும் போக்க கூடாதா என்று மன்றாடியதுண்டு. அதை கேட்ட நண்பர்கள், உன்னை திருத்தவே முடியாது என்று தலையில் அடித்துக்கொண்டு போகும் போதும், பாரதி கண்ட நவீன பாரதத்தை கனவுலகில் கண்டு கண்ணீர் சிந்தி இருக்கின்றேன்.நான் கோழை. கனவுலகில் மாத்திரம் வாழும் கோழை. உண்மை உலகம் எனக்கு புகட்டும் பாடங்களை புறக்கணிக்கும் கோழை. நிஜமான மனிதர் எல்லாம் மாந்தர்களே என்ற உண்மையை புறக்கணிக்கும் கோழை. என்றாவது விடியும் என்ற கனவை மாத்திரம் துரத்திக்கொண்டு இருக்கின்ற என்னிடம், விடியலை தேடும் சக்தி இல்லை, தைரியமும் இல்லை. ஆம். நூற்றுக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு தினமும், கனவில் தொடங்கி, கனவில் முடியும் எனது வாழ்க்கை. என்னால் ஆனா இரண்டு காரியங்கள் - ஒளிமயமான எதிர்காலத்தை கனவில் வடிப்பதும், உலகத்தில் எப்படியும் வாழலாம் என்பதற்காக அடுத்தவர் குடியை கெடுக்காமல் இருபதும் தான். ஒவ்வொரு கனவிலிருந்தும் விழிக்கும் தருவாயில், ஏதோ இதை போல் பிதற்றுவதுண்டு.